எமையழிக்கும் அறிவிற்கோர் சரணம்
தனதழிக்கும் மனதிற்கோர் சரணம்
சீரழிக்கும் சிந்தனைக்கோர் சரணம்
பிழைப்பழிக்கும் திறமைக்கோர் சரணம்
முடிவழிக்கும் செயலிற்கோர் சரணம்
மதியழிக்கும் உணர்வுக்கோர் சரணம்
வாழ்வழிக்கும் விதிக்கோர் சரணம்
இருப்பின் இருப்பில் இருத்தல் தரும் ஆனந்தமே சரணம்
பொருள்
ஒரு துருவத்தில் இருந்து பார்த்தால் பொருள் படும்
என்னை வாழ வைப்பது போல் சொல்லி அழிக்கும் அறிவிற்கு ஒரு சரணம் ஒரு நமஸ்காரம் ஒரு பெரிய கும்பிடு
தனதென்று இருக்கும் மனிதர்களையும் சொத்துக்களையும் தன் வக்கிரத்தினால் அழிக்கும் மனதிற்கு ஒரு கும்பிடு
சரியான பாதையை கூட சீரழிக்கும் குளறுபடியான சிந்தனைகளுக்கு ஒரு கும்பிடு
பிழைப்பே நிரந்தரம் என தோற்றுவித்து பிழைப்பை கொன்டே என்னை அழிக்கும் திறமைக்கு ஒரு கும்பிடு
பல மூட செயல்களால் என் வாழ்வில் பல்வேறு கட்ட நிலைகளில் நமக்கு நேரும் முடிவுகளால் என்னை அழிக்கும் செயல்களுக்கு ஒரு கும்பிடு
சிந்திக்க விடாமல் உணர்ச்சிப்பூர்வமாக ஆட்படுத்தி என்னை அழிக்கும் உணர்வுகளுக்கு ஒரு கும்பிடு
கடைசியாக வாழ்வை முழுவதுமாக அழிக்கும் விதிக்கு ஒரு கும்பிடு
இது எல்லாவற்றிலிருத்து என்னை காக்கும் என் இருப்பு என்ற பேரானந்தத்திற்கு பணிந்த சரணம்
மறு துருவத்தில் இருந்து பார்த்தால் பொருள் படும்
நான் என்ற எண்ணத்தை அழிக்கும் அறிவிற்க்கு ஒரு சரணம்
தனது என்ற சுயநலத்தை அழிக்கும் மனதிற்கு ஒரு சரணம்
நாம் எண்ணிய வகையில் ஒரு பிரச்சினையும் வராது பதுங்கி வாழும் வாழ்க்கையின் சீர்மை அழிக்கும் சிந்தனைக்கு ஒரு சரணம்
வாழ்கையை பிழைப்பு போல் ஓட்டும் நடவடிக்கையை திருத்தும் திறமைக்கு ஒரு சரணம்
பிறப்பு இறப்பு என்ற முடிவுகளை அழிக்கும் செயலிற்க்கு ஒரு சரணம்
புத்தி என்ற எஜமானனை அழிக்கும் எண்ணத்திற்கு ஒரு சரணம்
உலக வாழ்க்கையை அழிக்கும் கர்ம விதிக்கு ஒரு சரணம்
இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக அமைந்து முதலும் முடிவுமாக என்றும் எங்கும் நிறைந்திருக்கும் பேரானந்தத்திற்கு மட்டுமே சரணம்
Comments
Post a Comment